Tuesday, September 29

ரஜினி - கமல்… இரு உன்னத நண்பர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு!

ரஜினி - கமல்… இரு உன்னத நண்பர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு!

ல்ல நட்பு என்பது என்ன?

அங்கே வார்த்தைகளுக்கே இடமிருக்காது என்கிறார் வள்ளுவர்… அப்படியொரு நிகழ்வை நேற்று நேரு உள்விளையாட்டரங்கில் காணமுடிந்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே துறையில் இருபெரும் சிகரங்களாகத் திகழ்ந்தாலும் நல்ல நட்புக்கு உதாரணமாக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலைஞானி கமலும் இதுவரை எத்தனையோ மேடைகளில் சேர்ந்து தோன்றியிருக்கிறார்கள். ஆனால் நேற்றைய மேடையில்தான் இருவரும் இந்த அளவு உணர்ச்சிவயப்பட்டு நாம் பார்த்தோம்.

rajini-kamal-11

கலைஞானி என ரசிகர்களால் புகழப்படும் கமல்ஹாஸன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சாதனையை ‘உலகநாயகன் கமல்.. ஒரு தொடரும் சரித்திரம்’ எனும் பெயரில் பெரும் விழாவாக நேற்று கொண்டாடியது விஜய் டிவி.

இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிற நிகழ்ச்சி என்பதால் தேர்ந்தெடுத்த சில பத்திரிகையாளர்கள் மட்டும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

விழாவின் துவக்கத்தில் ரஜினியும் கமலும் கைகோர்த்தபடி அரங்கில் நுழைய, ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் விஐபிக்களும் எழுந்து நின்று உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

மலையாளப் படவுலகிலிருந்து மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், தெலுங்கின் முதல்நிலை நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்பட இந்தியத் திரையுலகமே திரண்டு வந்திருந்தது இந்த நிகழ்ச்சிக்கு.

ரஜினி - கமல் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் கொண்டுள்ள நல்ல நட்பு இந்த மேடையில் இருவர் விழிகளிலும் கண்ணீராய் வெளிப்பட, பார்த்த ரசிகர்களின் விழிகளெல்லாம் கலங்கிப் போயின.

ரஜினி தனது பாராட்டுரையில் கமல்ஹாஸனை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பேச, அதைக் கேட்டு கமல் நெக்குருகிப் போனார்.

கலைமகளின் அருள் பெற்ற கமல்!

இதோ ரஜினியின் பேச்சு:

“கமல் பத்தி பேசணும்னா 2 நாள் வேணும். 1975-களில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்த காலங்களில்தான் நான் தமிழ் சினிமாவிற்குள் வந்தேன். நாங்கள் இணைந்தும் படங்களில் நடித்து கொண்டிருந்த காலம் அது. “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் நடிக்க என்னை நடிக்க சிபாரிசு செய்தவரே கமல்தான். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்கவிடாமல் செய்திருக்க முடியும்.

நினைத்தாலே இனிக்கும் படம்தான் நாங்கள் இணைந்து நடித்த கடைசி படம். அப்போது கமல் என்னிடம் சொன்னார். ‘ரஜினி… நாம் இனிமேல் சேர்ந்து நடிக்க வேண்டாம். அப்படி நடிச்சா புகழ் பெயர் வாங்க முடியாது. நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழ் சினிமா உலகில் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். அது மட்டுமல்ல ‘நாம் பிரிந்தாலும் என் படங்களில் உள்ள கலைஞர்களை நீங்கள் பயன்படுத்துங்கள். உங்கள் படங்களில் உள்ளவர்களை நான் பயன்படுத்துகிறேன்’ என்று கூறினார். அது எங்களுக்குள் நிகழ்ந்த ஒரு ஒப்பந்தம் மாதிரிதான்.

சிரஞ்சீவி, அமிதாப், மம்முட்டி, மோகன்லால் எல்லோரும் நினைக்கலாம்… ‘கமல் என்ற சூப்பர் ஸ்டார் இருக்கும்போது ரஜினி எப்படி இவ்வளவு பெரிய ஹீரோவானான்…?’ என்று. நான் கமல் நடிப்பை பார்த்துதான் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளேன்.

குருநாதர் பாலச்சந்தர் எங்கள் 2 பேரையும் வைத்து படங்கள் இயக்கினார். அப்போதெல்லாம் ஷூட்டிங்கில் கமல் நடித்துக் கொண்டிருப்பார். நான் அவர் நடிப்பைப் பார்க்காமல் சிகரெட் பிடிக்க வெளியே சென்றுவிடுவேன். குருநாதர் என்னை தேடுவார். நான் வந்தவுடன், “எங்கேடா போனே ‘தம்’ அடிக்கவா? ஏன்டா… கமல் நடிப்பை பாருடா… நடிப்பை கத்துக்கோடா!” என்பார்.

அதன் பிறகுதான், கமல் நடிக்கும்போது அவரது நடிப்பை கவனித்தேன். அதன்பிறகு தம் அடிக்க போறதை நிறுத்திக்கிட்டேன். கமலோட ரூட் வேற. அதை நான் பின்பற்றாமல் எனக்குன்னு வேற ரூட் ஒன்றைப் போட்டேன்… கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணினேன்.

நான் நடித்துக் கொண்டிருக்கும் ‘ரோபோ’ எந்திரன், படம் கமல் நடிக்க வேண்டிய படம். அவருக்குதான் ஷங்கர் ரெடி பண்ணினார். ஆனால் சில கால தாமதத்தால் இப்போது மாறிப் போய் உள்ளது. ஷங்கர் ரோபோ பற்றி என்னிடம் கதையை சொல்லும்போது, ‘நான் நடிக்கமாட்டேன். இது கமலுக்காக தயார் செய்த கதை. அதில் என்னைக் கொண்டு வரமுடியாது என்றேன். ஆனால் ஷங்கர் சார் இது உங்களுக்காக வேறு மாதிரி செய்துள்ளேன்…’ என்றார்.

கமல் உண்மையான ‘சகலகலா வல்லவன்’. கலையரசி என்ற தாய் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், என்னை எல்லாம் கைகளால் பிடித்து கொண்டுள்ளார். ஆனால் கமலை மட்டும் மார்போடு அனைத்து பாதுகாத்துள்ளார். டஏன் இப்படி செய்கிறீர்கள்? நாங்களும் நடிகர்கள்தானே…’ என்று கலையரசியிடம் நான் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார், ‘நீ சினிமாவிற்கு வரவேண்டும் என்று இந்த ஜென்மத்தில்தான் ஆசைப்பட்டாய். ஆனால் கமல் ஜென்ம ஜென்மமாக அதற்காகவே தவம் கிடந்தவர்…” என்றாள்.

அதனால்தான் கமலுக்கு இத்தனை பெருமை…,” என்றார் ரஜினி.

ரஜினிதான் உண்மையான சூப்பர் ஸ்டார்! - கமல் புகழாரம்

ரஜினியின் பேச்சு கமலின் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது. தனது ஏற்புரையின் போது ரஜினியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். எந்த மேடையிலும் அத்தனை சுலபமாக உணர்ச்சிவயப்படாத கமலை, இப்படிப் பார்த்ததே வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது.

ஒரு கலைஞன் வாழும்போதே அவனுக்கான முழுமையான மரியாதையும் பாராட்டுக்களும் செய்யப்பட வேண்டும் என்பது கமல் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வரும் கருத்து.

அந்த வகையில் தனக்கு அளிக்கப்பட்ட இந்த மாபெரும் கவுரவம், பாராட்டுக்காக மேடையில் மண்டியிட்டு ரசிகர்களுக்கு நெகிழ்வுடன் வணக்கம் தெரிவித்தார் கமல். அப்போது ஒட்டுமொத்த கூட்டமும் எழுந்து நின்று அந்த மாபெரும் கலைஞனுக்கு தங்கள் கரவொலியை, மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பைப் பரிசாகத் தந்தது.

பின்னர் கமல் இப்படிப் பேசினார்:

இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அழக்கூடாது, சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன். இது இரண்டுமே நடக்கவில்லை.

நான் இந்த விழா சின்னதாக நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இது இவ்வளவு பிரமாண்ட விழாவாக நடக்கும் என நினைக்கவில்லை. நான் இந்த அளவுக்கு வந்துள்ளதற்குக் காரணம் நீங்கள் என்மீது வைத்துள்ள அன்புதான். உங்கள், சக கலைஞர்களின் அன்பால்தான் முன்னேறி உள்ளேன்.

நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு, கணக்குகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள்… அதற்கு உங்கள் அன்புதான் காரணம்.

என் நண்பர் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தி உள்ளார். இப்படியொரு வார்த்தையை அவரைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்… அவர் இருக்கும் உயரம், அவருக்குள்ள செல்வாக்கு இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல், என்னை உயர்த்திப் பேசுவதற்காக அவரைத் தாழ்த்திக் கொள்கிறார். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். அதில் எப்போதும் மாற்றமில்லை.

எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. அது எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இடையே இருந்த நட்பைப் போன்றதில்லை… அதையும் தாண்டியது!

திரையுலகில் எங்கள் இருவரைப் போன்ற சிறந்த நண்பர்களாக, வேறு யாராலாவது இருக்க முடியுமா? என்பதை ஒரு சவாலாகவே நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். அந்த அன்பு எனக்குப் பிடித்திருக்கிறது…” என்றார்

No comments:

Post a Comment